தாவீதும், கூழாங்கற்களும்
தாவீதின் முதல் யுத்தத்தில் தாவீது பயன்படுத்திய ஆயுதங்கள் தான் இந்த கூழாங்கற்கள். இதனை 1சாமு. 17ம் அதிகாரத்தில் காணலாம். அதாவது, கோலியாத்துடனான அந்த யுத்தத்தில் தான் தாவீது இந்த கூழாங்கற்களை பயன்படுத்தினார்.
கூழாங்கற்கள்:
இவை கையால் பெயர்க்கப்படாத கற்கள். ஆம்! கூழாங்கற்கள் தானே உருவாகி மலையிலிருந்து உண்டாகி வருவதாகும். இது பாறை வகையைச் சார்ந்தது. பல வண்ணங்களிலும், எடைகளிலும் இருக்கும். வேதாகமத்தில் தாவீது கோலியாத் சம்பவத்தில் இந்த கூழாங்கற்கள் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன.
ஆற்றங்கரையில் இந்த கூழாங்கற்கள்:
ஏலா பள்ளத்தாக்கின் அருகில் ஒரு ஆற்றின் கரையில் இந்த கூழாங்கற்கள் மற்ற தங்கள் சக கற்களோடு கிடந்தன. அவைகளுக்கு மேன்மையுமில்லை; தங்களுக்கென்று தரிசனமும் இல்லை. ஆற்றைக் கடப்பவர்கள் அல்லது ஆற்றிக்கு வருபவர்கள் கால்களில் அவைகள் மிதிப்பட்டும், பொருட்படுத்த படாமலும் கிடந்தன.
ஒரு நாள் அவைகளில் 5 கற்களை ஒரு கை வந்து எடுத்தது. ஆம்! நம்மை தேடி நமக்கான தரிசனத்தில் நம்மை பயன்படுத்த நம் எஜமான் நம்மை தன் கையில் எடுத்தார். அந்த கூழாங்கற்களும் தங்களை எடுத்தவரின் சித்ததிற்கு சம்மதித்து தங்கள் பயணத்தை தொடர்ந்தது.
யுத்தத்தில் கூழாங்கற்கள்:
தாவீது ஒரு கவணுடன் இந்த 5 கூழாங்கற்களை எடுத்துச் சென்றார். அதன் மூலம் அவன் கோலியாத்தை எதிர்க்க சென்றார். அவற்றை தன்னுடைய அடைப்பையில் போட்டு கொண்டு சென்றார். ஆகவே அந்த கூழாங்கற்கள் தங்களுக்கான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருந்தது.
5 கற்கள்:
தாவீது 5 கூழாங்கற்களை எடுத்தார். அதாவது, கோலியாத் உட்பட அவன் குடும்பத்தை சேர்ந்த 5 இரட்சதர்களை அழிக்கும் படியாகவே இந்த 5 கற்களும் எடுக்க பட்டது என்று சிலர் தியானிப்பர்.
இந்த 5 கற்களும் 5 விதமான பிசாசின் தந்திரங்களை ஜெயிக்கும் படியாக இருக்கிறது என்றும், இந்த 5 கற்களும் 5 விதமான கிருபைகள் என்றும் சில தேவ மனிதர்கள் தியானிக்கின்றனர்.
🪨முதல் கல்: சத்துருவின் தந்திரங்களை முறியடிப்பது. (1சாமு. 17:8,9)
🪨இரண்டாம் கல்: நாம் விடாய்த்திருக்கையில் நம்மை மேற்கொள்ளும் சத்துருவை முறியடிப்பது. ( 2சாமு. 21: 15, 16)
🪨மூன்றாம் கல்: அபிஷேகிக்க பட்டவர்களை அல்லது அபிஷேகத்தை விட்டு நாம் நீங்குகையில் நம்மை மேற்கொள்ளும் சத்துருவை முறியடிப்பது. ( 2சாமு. 21:18)
🪨நான்காம் கல்: பழிவாங்க துடிக்கும் சத்துருவை முறியடிப்பது. ( 2சாமு. 21: 19)
🪨ஐந்தாம் கல்: மிகுந்த பெலனோடு நம்மை நெருக்கும் சத்துருவை முறியடிப்பது. ( 2 சாமு. 20: 20)
பொதுவாக யுத்தத்தில் வாள், கத்தி, ஈட்டி, வில், அம்பு போன்ற பலமான ஆயுதங்களே பயன்படுத்த படும். வாள் பிடித்து சண்டைக்கு செல்வதிலும் ஒரு மேன்மை இருக்கதான் செய்கிறது. ஆகவே, இந்த பலமான ஆயுதங்களுக்கு கிடைத்த இடம் நமக்கும் கிடைத்து விட்டது என்று தலைகணத்தில் இந்த கூழாங்கற்கள் இருக்கவில்லை. மாறாக, தங்களுக்கான ஏற்ற நேரம் வரும் வரை பொறுமையாக தாங்கள் அடைக்க பட்டிருந்த அடைப்பைக்குள் காத்திருந்தன.
1 பேதுரு 5:6 ல் வேதமும் சொல்கிறது, "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" என்று.
ஆம்! கர்த்தருடைய சரியான திட்டங்களுக்காய், அந்த திட்டங்களின் சரியான தருணங்களுக்காய் நாம் பொறுமையுடன் காத்திருத்தல் அவசியமானது. அப்போது தான் அது நமக்கு ஜெயமாய் மாறுகிறது.
கற்களை எடுத்துக் கொண்ட தாவீது தேவனுடைய தைரியத்தினால் கோலியாத்தை தாக்க முன்னேறி சென்றான். கர்த்தர் பட்டயத்தினால் மாத்திரம் நம்மை இரட்ச்சிக்கிறவர் அல்ல; அவர் நம்மை வெற்றிசிறக்க பண்ண சித்தம் கொண்டால் ஒரு புல்லை கொண்டும் கிரியைகளை நடப்பிக்க அவரால் கூடும்.
1 கொரி. 1:27 ல் வேதம் சொல்கிறது, "பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்" என்று. ஆம்! அற்பமான, எதிர்பாராத காரியங்களை வைத்தும் நம்மை இரட்சிக்க கர்த்தர் வல்லவர் என்பதை தாவீதும் நன்றாய் அறிந்தார். ஆகவேதான், நான் பட்டயம் இல்லாமல் கர்த்தரின் நாமத்தினால் வருகிறேன் என்று விசுவாச அறிக்கையிடுகிறார். விசுவாச அறிக்கையிட்ட தாவீது ஒரு கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி கோலியாத்தின் நெற்றியில் குறி பார்த்து அடித்தார்.
அதுவரை தாழ்மையோடு பொறுமையோடு காத்திருந்த கற்கள் தங்களுக்கான வேளை வருகையில் தான் சிறப்பாக செயல்படும் படி தன்னை தன்னுடைய எஜமானின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டன. அது தன்னை கவணோடு பொருந்தி செயல்பட ஒப்புக்கொடுத்தது.
"நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்".
( ஏசாயா 1 : 19 ) என்று வேதமும் நமக்கு கற்று தருகிறது. ஆம்! நாம் மனம் பொருந்தி செவிக் கொடுத்தால் தான் நன்மையை, ஜெயத்தை சுதந்தரிக்க முடியும்.
கவண் இல்லாமல் இந்த கல் ஜெயம் பெற்றிருக்க முடியாது. கல் இல்லாமல் வெறுமனே கவணும் கிரியை செய்திருக்க முடியாது. ஆம்! தேவபிள்ளைகள் ஒருவருக்கொருவர் இப்படி ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் சாத்தானை, நம் எதிராளியை நாம் வெல்ல முடியும்.
பரிசுத்தவான்களுடைய குறைவில் நாம் உதவி செய்ய வேண்டும்.
( ரோமர் 12 : 13 )
கவண், தான் தான் பெரியவன் என்றோ; அல்லது கல் தான் தான் பெரியவன் என்றோ பகை பாராட்டிருந்தால் இத்தகைய ஆர்ப்பரிக்குற வெற்றி அவர்களுக்கு கிடைத்திராது. அது இரண்டும் ஒருமனபட்டு செயல்பட்டதினாலே தான் ஜெயம் கிடைத்தது.
கவணை விட்டு புறப்பட்ட கல்லோ தன் எஜமானின் இலக்கில் துல்லியமாக பறந்தது. தேவன் நம்மை பலவான் கையிலுள்ள அம்புகளாய் தெரிந்தெடுத்துள்ளார். பலவான் கையினால் எறியப்பட்ட அம்பு காற்றை, எதிர் திசையை, தடைகளை, தன்னை நோக்கி வரும் பிரச்சனைகளை கிழித்து கொண்டு தன் பாதையில், தனக்கு நியமிக்க பட்ட ஓட்டத்தில், தன் எஜமானனுடைய இலக்கில் வேகமாய் முன்னேறி கொண்டே இருக்கும். அதினாலேயே அது இலக்கை அடையும். சத்துருவின் நெஞ்சையும் பிளக்கும்.
வேதம் செல்கிறது, "உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது" என்று.
( நீதி. 4 : 25 )
ஆம்! யுத்தத்திற்கு வந்த கல் தனக்கு இஷ்டமான பாதையில் ஓடாமல் எஜமானனுடைய பாதையில் நேராய் நோக்கி பறந்தது. அதினால் முடிவு மகிமையாய், ஆர்ப்பரிப்பாய், ஆரவாரமாய், மேன்மையாய் இருந்தது. ஆம்! அந்த கல் கோலியாத்தின் நெற்றியை சரியாய் குறி பார்த்து தாக்கியது. அந்தோ!! சத்துரு சரிந்தான்; அவன் விழுந்தான்; பகைவர்களின் நம்பிக்கை அதினால் படுகுழியில் விழுந்து விட்டது. தாவீது ஜெயித்தான். கர்த்தருடைய ஜனம் வென்று விட்டது.
நாம் நம்மை தேவ சித்ததிற்கு ஒப்புக் கொடுத்து செயல்பட அர்ப்பணித்தால் அற்பமான கூழாங்கல்லான நாம் கர்த்தருடைய கரத்தில் ஜெயித்த கூழாங்கல்லாய் இருப்போம். ஆம்! நாம் விலையேற பெற்றவர்களாய் மாறி விடுவோம். ஆமென்!!🙏🙏