பெற்றோர் பெற்றோராக இருங்கள்,
ஒருபோதும் பெற்றோரே நண்பராகாதீர்...!
Infosys நிறுவனரின் எச்சரிக்கை பதிவு...!
திரு. நாராயண மூர்த்தி INFOSYS அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.
நாம் நமது தற்காலக் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா?
அவர் தனது அண்டை வீட்டுக்காரர் தன்னுடன் மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்ட விஷயத்தை நமக்குப் பதிவு செய்கிறார்.
பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன். எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள். அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே.
சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம் செல்லம் என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா என்று கூறினேன். அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன். அவள் சை என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள். அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செய்ததை அவள் விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது.
நான் சில நிமிடம் கழித்து மீண்டும் செல்லம் என்று அழைத்த போது அவள் கையில் இருந்த டிவி ரிமோட்டை பட்டென்று மேஜையில் வைத்து விட்டு அப்பா உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? எத்தனை முறை தான் என்னை எழுப்புவீர்கள்? நானும் தான் நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எனக்கும் களைப்பாக தான் இருக்கிறது என்று கூறினாள். நான் ஸாரிமா என்று சொல்லி விட்டு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து சமையலறை சிங்கில் போட்டுவிட்டு என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.
என் இதயம் அழுதது. நான் அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது தான். இந்தக் கால இளைய தலைமுறையினர் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள்? நாம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்தது தவறோ? அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ? நாம் அவர்களை நண்பர்கள் போல் நடத்தியது தவறோ? அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் பெற்றோர்கள் நாம் மட்டும் தானே. பெற்றோருக்கான கடமையை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள்?
இன்று பிறந்த குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருப்பதைப் பற்றிக் கவலைப் படுகிறது இந்த உலகம். ஆனால் பெற்றோர்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா? அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஈகோக்களை வளர்த்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது இதைத்தான். இந்தக் காலத்தில் எந்தக் குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்படிகிறார்கள்? இதற்குக் காரணம் என்ன?
இதேபோல் தான் அன்று ஒரு பார்ட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது என் 50 வயது நண்பர் தன் கார் சாவியை மறந்து போய்க் காரிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் தன் டீன் ஏஜ் பெண்ணை எடுத்துக் கொண்டு வரப் பணித்தார். அவள் நான் என்ன உனக்கு வேலைக்காரியா? நீயே போய் எடுத்துக் கொள் என்றாள். அவரும் சிரித்துக் கொண்டே இல்லை மா நான் தான் உனக்கு வாழ் நாள் முழுவதும் சேவகன் என்று கூறிக் கொண்டே போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார். இதுவே இன்று சமுதாயத்தில் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
நாம் நமது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைப் பற்றியும் சுயமரியாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க விரும்பினால் முதலில் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணக்காரர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தாலும் அவர்களுடைய பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தான். அவர்கள் என்றுமே அவர்கள் பெற்றோருக்கு சமமாக மாட்டார்கள்.
பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். நீங்கள் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்தாதீர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால் பெற்றோர்கள் நீங்கள் மட்டுமே.
அதனால் அவர்களை நீங்கள் வளர்ப்பதற்கு விதிமுறைகளை வகுப்பதற்கும், அந்த விதிமுறைகளை அவர்கள் மதிப்பதற்கு அவர்களைக் கட்டாயப் படுத்துவதற்கும் ஒரு போதும் அஞ்சாதீர்கள்.
No comments:
Post a Comment