Sunday 25 February 2018

பரிசுத்த ஆராதனை, இசை பயிற்சி கூடமா???

சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
சங்கீதம் 33:2,3


இந்த வசனம் இரண்டும் பாடல் ஆராதனை நடத்தும் ஆராதனை வீரர்கள் மற்றும் இசை கருவிகளை மீட்டுவோர் மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஓய்வுநாள் காலை வேளைகளில், நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இசைக்கருவி மீட்டுவதற்கான அழைப்பு பெற்று, பயணிப்பது வழக்கம். நாகர்கோவிலை பொருத்தமட்டில் (நான் அறிந்த வரையில்) காலை 5:45 மணிமுதல் ஓய்வுநாள் ஆராதனை துவங்குகிறது. எனவே, பயணத்தின் இடையே நிச்சயமாக சில சபைகளில் பாடி, இசைக்கருவிகள் மீட்டுவதை கேட்க முடியும். சில சபைகளில் மிகவும் நேர்த்தியாக சிறந்த முறையில் பாடல் குழுவினர் பாடி ஆராதனை செய்யும் போது, எனது வாகனம் நகர மறுத்தும், காதுகள் இரசிக்கவும், ஆத்துமா தேவ பிரசன்னத்தை உணரவும் மறுப்பதில்லை... இது போன்று நிகழும் போது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அப்போது என்னை குறுக்கிட்ட அந்த பாடல் முடியும் வரையாவது, அங்கு நின்று இரசித்து விட்டு செல்வேன்...

சில சபைகளில் பாடல் குழுவினர் ஒரு சுருதியிலும், விசுவாசிகள் வேறு சுருதியிலும், இதை கேட்டு பொருக்க முடியாமல் போதகர் புதிக இசை கருவியில் இடம்பெறாத வேறு சுருதியிலும், இசைக்கருவிகள் மீண்டுபவர்கள், அவர்களுக்கு தெரிந்த அந்த ஒரே சுருதியிலுமென மிகவும் அற்புதமான இரைச்சலை உருவாக்கி, உள்ளே இருக்கும் ஓரிருவரையும், அந்த பகுதியில் வாழ்வோரையும், தவறாமல் தொந்தரவு செய்து கெண்டிருப்பார்கள்...

வேறு சில சபைகளில் பாடல் புத்தகங்களில் கொடுக்க பட்டுள்ள ரிதம், ஸ்கேல் பார்த்து ரிதம் ஸ்டைல் மட்டும் கீபோர்ட்-ல் மீட்டி பாடுவார்கள். ஏனெனில் நல்ல முறையில் இசை மீட்டுவோர் இல்லை என்பர். ஆனால் ஒரு இசை கலைஞனை அழைத்தால், அவனுக்கும் வயிறு உண்டு என்பதை யோசிக்காமல், இசை மீட்டி முடிந்த உடன் கை கொடுத்து கர்த்தர் உங்களை உயர்த்துவார் என போலியாக ஆசீர்வதித்து, போக்குவரத்து செலவுக்கு கூட ஈடாகாத தொகையை காணிக்கை என்று திணித்தால், நல்ல இசை கலைஞர்கள் திரையிசையை தேடுவதை எப்படி தடுக்க முடியும்??? நம்மிடம் எப்படி நல்ல இசை கலைஞர்கள் வாழ முடியும்??? 

அது மட்டுமா, பிரபல ஆராதனை வீரர்கள் நடத்தும் பிரமாண்ட கிறிஸ்தவ இசை நிகழ்ச்சிகளில் நம்மிடம் தரமான இசை கலைஞர்கள் இருந்தும், சினிமாவில் மீட்டும் இசை கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தவறான மாதிரியை காட்டுவதும், தரமான இசை கலைஞர்களின் பார்வை திரை இசையை நோக்கி நகர காரணமாகிறது. 

இதைப்பற்றி பிறகு ஒரு கட்டுரை எழுதலாம்....
எங்கே, வாத்தியங்களை நேர்த்தியாக மீட்டி, தாளம் மற்றும் சுருதி தவறின்றி பாடி, சிறப்பான ஆராதனை நடைபெறுகிறதோ, அங்கே கேரூபீன்கள், சேராபீன்களின் இசையின் நடுவில் வசிக்கும் தேவன் அசைவாடுவது நிச்சயம். அங்கே அற்புத அடையாளங்கள் நடைபெறும். அங்கே சபை வளர்ந்து பெருகும். இதுவே தேவன் விரும்பும் புத்தியுள்ள ஆராதனை ஆகும்.

தேவன் விரும்பும் புத்தியுள்ள ஆராதனையாக நமது ஆராதனையை மாற்றுவது எப்படி???

1. இசை கருவிகளை மீட்டுபவர்கள் மற்றும் பாடல் ஆராதனை நடத்தும் முழு பாடல் குழுவும், இசையை நிச்சயமாக கற்க வேண்டும்..

2. பாடல் குழுவினர் மேடை ஏறுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் கூடி ஒருமனதாக ஜெபித்து, பாடல்களை தெரிந்தெடுக்க வேண்டும்.

3. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நபர் ஆராதனை நடத்த வேண்டும். ஒருவர் பொருப்பு எடுத்து இருக்கும் போது, அவர் தவறு செய்தால் கூட மற்றவர்கள் குறுக்கிட கூடாது. அவர் செய்த தவறுகளை திருத்தும் வழிகளை அடுத்த நாள் தனியாக பாசத்தோடு கற்பிக்கலாம். ஒரே நபர் செய்தால் பெருமை உருவாக வழி வகுக்கும். பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பு ஏற்படும்; புதிய தலைவர்கள் உருவாகுவதை தடுக்கும்.

4. குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு முன் பாடல்கள் மற்றும் அந்த பாடலுக்கான சுருதி (ஸ்கேல்) மற்றும் தாளம் (ரிதம் ஸ்டைல்) தேர்வு செய்து ஒரு நாளாவது அனைவரும் சுய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வாத்தியங்களை மீட்டுபவர்கள், chords, drum kit, voice, bgm அல்லது அந்த பாடலுக்கான இசை கருவிகளை தேர்வு செய்து பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பின்னர் குழுவாக இணைந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

5. எவ்வளவு திறமையும் தாலந்தும் தேவனால் பெற்றிருந்தாலும், பயிற்சி இல்லாமல் மேடை ஏறுவது தோல்வியின் துவக்கமே..

6. எந்த பாடலை எங்கே பாட வேண்டும், பாடலில் என்ன புதுமைகள் செய்ய வேண்டும், முன்னிசை, இடையிசை எப்படி அமைக்க வேண்டும் என பயிற்சி வேளையில் முடிவு செய்ய வேண்டும்..

7. புதிய பாடல்களை குழுவினர் அனைவரும் படித்த பின்னரே மேடையில் பாட வேண்டும். இயன்றவரை பாடல் வரிகளை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும்..

8. குழுவினர் அனைவரும் சிரமமின்றி பாடும் சுருதியை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

9. பாட வேண்டிய பாடலை மேடையில் முடிவெடுக்க கூடாது. 
(சிலர் மேடையில் தனக்கு தோணும் பாடலை பாடி விட்டு ஆவியானவர் நடத்தினார் என்று ஓட்டுவார்கள், ஆராதனை நாம் தேவனுக்கு செலுத்துவது. நாம் ஒன்றை தயார் செய்து வைத்திருக்கும் போது தயாராகாத ஒன்றை ஏவும் அளவிற்கு பரிசுத்த ஆவியானவர் முட்டாளல்ல. எந்த பாடலிலும் அவருடைய கிரியைகளை நடப்பிக்க அவருக்கு எந்த தடையும் இல்லை. அப்படியே வேறு பாடல் பாட வேண்டுமென்றால் அதை பயிற்சிக்கு முன் ஜெபித்து ஆயத்தபடும் போது மட்டுமே தேவன் உணர்த்துவார்.)

10. ஏற்கனவே பாடிய பாடலை மறுமுறை தேர்வு செய்யும் பொழுது, தெரிந்த பாடல் தானே என்று நிர்விசாரமாக இருக்காமல், இந்த முறை அதில் என்ன புதுமைகள் செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து, அதை பயிற்சி செய்து, பின் மேடையில் வித்யாசத்தை காட்ட முயல வேண்டும்.

11. பாராட்டுக்கள் கிடைக்கும் போது நாம் வளர்ந்து விட்டோம் என்று கர்வம் கொள்ளாமல், தேவனுக்கு நன்றி கூறி, பாராட்டை பொறுப்பாக ஏற்று இன்னும் பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் பாராட்டுக்கள் சந்திரன் போன்றது. பாராட்டுக்கள் பொருமை கொடுத்தால் திறமை தேய்பிறை ஆகும். மாறாக தாழ்மையையும், பயிற்சியையும் கொடுத்தால் வளர்பிறையாக பிரகாசிக்கும்...

12. நாம் வளரும் போது கூடவே நமக்கு பின்னர் அந்த இடத்தை நிரப்ப குறைந்த பட்சம் 2 பேரையாவது உருவாக்க வேண்டும்.


இவைகளை பின்பற்றினால் தேவன் விரும்பும் புத்தியுள்ள ஆராதனையாக நமது ஆராதனை மாறுமென்பதில் ஐயமில்லை....

இசை மற்றும் இலக்கியபணியில்
J.E.ஜெபா

No comments:

Post a Comment